பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத் தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லி செல்லப்போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்கடுக்கான நிலமோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து டெல்லியில் அத்வானி இல்லத்தில் அவசரமாக கூடிய அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் நிதின் கட்காரி, அருண்ஜெட்லி ஆகியோர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பாவிடம் இருந்து முதலமைச்சர் பதவியை பறிப்பது என்று முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காக அவரை மீண்டும் ஒருமுறை டெல்லிக்கு வருமாறு பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மீண்டும் ஒருமுறை டெல்லி செல்லும் திட்டம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நிலமோசடி விவகாரத்தில் தமது நிலைபாட்டை கடந்த 19ஆம் தேதி அன்றே கட்சி தலைமையிடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டதாக எடியூரப்பா கூறியுள்ளார்.
மேலும் தமது தலைமையின் கீழ்தான் கர்நாடக மாநிலத்தில பா.ஜ.க.வால் ஆட்சியை பிடிக்க முடிந்ததால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக தம்மை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
துவக்கம் முதலே எடியூரப்பாவுக்கு பா.ஜ.க. மேலிடம் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதனிடையே மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட போவதில்லை என்று எடியூரப்பா மறைமுகமாக அறிவித்திருப்பது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.