கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது மேலும் ஒரு நிலமோசடி புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து அவரது பதவியை பறிப்பது பற்றி முடிவு எடுக்க பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
200 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை தமது மகன்களுக்கு எடியூரப்பா குறைந்த விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாற்று மறைவதற்குள் பெல்லாரியை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் பலவற்றிற்கு அவர் முறைகேடாக நிலம் வழங்கியுள்ளார் என்ற புகார் எழுந்துள்ளது.
எடியூரப்பாவை மையமாக வைத்து அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருவதால் அவரிடம் இருந்து பதவியை பறிக்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க மேலிடம் தள்ளப்பட்டுள்ளது.
ஆனால், எடியூரப்பா பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் பதவியை பறித்தால் தமது ஆதரவாளர்கள் 50 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வைவிட்டு விலகப் போவதாகவும் எச்சரித்து இருந்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும், அகில இந்திய தலைவர் நிதின் கட்கரியும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் எடியூரப்பாவை மீண்டும் டெல்லி வருமாறு அழைத்துள்ளனர். இதனால் கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.