அயோத்தியில் சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய பகுதியை 3 ஆகப் பிரித்து, 2 பகுதிகளை இந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் அளித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு சற்று முன் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக சர்ச்சைக்குரியதாக இடத்தின் மீது யாருக்கு முழு உரிமை உள்ளது என்பது தொடர்பாக முஸ்லீம்களின் சுன்னி வக்ஃப் வாரியம், இந்துக்களின் நிர்மோகி அகாரா ஆகிய இரண்டு அமைப்புகளின் மனுக்களை நிராகரிப்பதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், ஒரு பகுதி சுன்னி வக்்ப் வாரியத்திற்கும், பாபர் மசூதியின் நடுப்பகுதியே ராமர் பிறந்த இடம் என்று ஏற்றுக் கொண்டதாகவும் அப்பகுதி இந்துக்களுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதி சட்டப்படி தகராறுக்கு உட்பட்ட பகுதியாக ஆனபோதே அங்கு இராமர் சிலை இருந்ததாக கூறப்பட்டதை இரண்டு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளும் அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.
சர்ச்சைக்குரிய இடம் தங்களுடைய தீர்ப்பின் படி பிரித்தளிக்கப்படும் வரை அந்த இடத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மூன்று நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பின் முழு விவரம் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் என்று கூறப்படுகிறது.