அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்றும் பரபரப்பான தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சன்னி வஃக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளது.
60 ஆண்டு காலம் நீடித்து வந்த புதிருக்கு விடையளிக்கும் விதமாக இன்று இத்தீர்ப்பை அளித்த அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடையே அபரித முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அயோத்தியில் உள்ள 2.7 ஏக்கர் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு பாகம் நிர்மோஹி அகாராவுக்கும், இன்னொரு பாகம் இந்துக்களுக்கும், மூன்றாவது பாகம் இஸ்லாமிய வஃபு வாரியத்திற்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம் ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ராமர் கடவுள் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடம்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எஸ்.யு. கான், நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதிகள் டிவி ஷர்மா ஆகிய 3 பேருமே ஒருமனதாக தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அதாவது அயோத்தியில் தற்போது இருக்கும் ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படாது என்பதோடு, அங்கு இந்துக்கள் தாராளமாக ராமர் கோவிலை கட்டலாம் என்றே அர்த்தமாகும்.
இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.