Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கான்வெல்த் ஊழல் குறித்து போட்டி முடிந்த பிறகே விசாரணை: மத்திய அரசு

கான்வெல்த் ஊழல் குறித்து போட்டி முடிந்த பிறகே விசாரணை: மத்திய அரசு
புதுடெல்லி , திங்கள், 9 ஆகஸ்ட் 2010 (18:26 IST)
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, போட்டி முடிவடைந்த பின்னரே விசாரணை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாற்றுக்கள் குறித்த விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது.

விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள், இந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணையோ அல்லது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையோ நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

பா.ஜனதா உறுப்பினர் கீர்த்தி ஆஸாத் விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில், ஊழல்கள் காரணமாக காமன் வெல்த் போட்டி ஏற்பாடுகளை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதிலும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது என்றும், போட்டி ஏற்பாடுகளுக்காக பல்வேறு துறைகளில் செலவிடப்பட்ட தொகை, வழக்கமாக ஆகும் செலவை விட 513 விழுக்காடு அதிகமாக உள்ளது என்றும் குற்றம்சாற்றினார்.

அப்படியானால் அந்த கண்காணிப்பு கமிட்டி ஊழலை கண்டுகொள்ளாமல் இருந்ததா அல்லது கண்ணை மூடிக்கொண்டிருந்ததா என அவர் கேள்வி எழுப்பினார்.

நாக்பூரில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட 90 கோடி ரூபாய் செலவாகி உள்ள நிலையில், காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்க 961 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படி எனில் அந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்க தங்கம், வெள்ளி அல்லது வைரம் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா என்ன? என்றும் அவர் சரமாரியாக கேள்வி தொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசினர்.

இதனையடுத்து எதிர்கட்சிகளின் குற்றச்சாற்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி, காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்றும், அதே சமயம் போட்டி முடிவடைந்த பின்னரே விசாரணை நடத்த முடியும் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil