காஷ்மீர் கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்படுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஃபிதா நபி லோன் என்ற 20 வயது இளைஞர் ஒருவர், கடந்த வாரம் ஸ்ரீநகரில் நடந்த கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ரீநகரில் பதற்றம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நேற்றுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகரில் ஊரடங்கும், அனந்த்நாக், புல்வாமா, காக்போரா மற்றும் குல்காம் ஆகிய இடங்களில் தடைச் சட்டமும் அமலில் உள்ளது.
இந்நிலையில் மேற்கூறிய இளைஞர் உயிரிழப்பைத் தொடர்ந்து கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதில் 33 பேர் ஜூலை 30 ஆம் தேதிக்கு பின்னர் நடைபெற்ற கலவரத்திலும், மீதமுள்ள 17 பேர் ஜூன் 11 முதல் ஜூலை 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நடந்த கலவரத்திலும் பலியாகியுள்ளனர்.