நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பா.ஜனதா உள்ளிட எதிர்கட்சிகள் இன்று மாலை கொண்டு வர உள்ள வெட்டு தீர்மானத்தை, தமது கட்சி ஆதரிக்காது என்றும், இது விடயத்தில் அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. விஜய் பகதூர் சிங், பா.ஜனதா ஆட்சி அதிகாரத்திற்காக அலைமோதிக் கொண்டிருப்பதாகவும், அக்கட்சியின் கொள்கைகள் தவறானதாக உள்ளதாகவும் கூறினார்.
மக்களவையில் 21 எம்.பி.க்களை வைத்துள்ள பகுஜன சமாஜ் கட்சி, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது.
உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, தம்மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இது தொடர்பாக பரிசீலிக்க தயாராக உள்ளதாக, இவ்வழக்கை தொடர்ந்த சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே பகுஜன் சமாஜ் கட்சி, வெட்டு தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை வெட்டு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.