ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நடந்திருக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அலுவலகத்திலும், கொல்கத்தா கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளின் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கொல்கத்தா அணியின் மும்பை அலுவலகமும் இந்த சோதனைக்கு தப்பவில்லை. அதேப்போன்று டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஹைதராபாத் அலுவலகம், சண்டிகரில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அலுவலகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 8 நகரங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மும்பையில் உள்ள மோடியின் அலுவலகத்திலும் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. மோடியும் மீண்டும் விசாரணக்குட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய சோதனைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நடந்திருக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய வருவாய் சேவை இணை இயக்குநர் அகிலேந்து ஜாதவ் கூறுகையில், " சில மோசடிகளுக்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கவுள்ளோம். சில பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.எங்களுக்கு கிடைத்துள்ளவற்றை தீவிரமாக ஆராய்ந்து முடிவுக்கு வருவோம் "என்றார்.