எதிரி நாட்டின் ஏவுகணை இலக்கு நோக்கி இறங்கிவரும் வேளையில் எதிர்கொண்டு அழிக்கவல்ல அதி நவீன ஏவுகணை மறித்தழிப்பு ஏவுகணையை இந்தியா நாளை சோதிக்கவுள்ளது.
பாதுகாப்பு ஆராய்சி் மற்றும் மேம்பாட்டுக் கழகம் (Defence Research and Development Organization - DRDO) உருவாக்கியுள்ள இந்த அதி நவீன ஏவுகணை (Advance Air Defence - ADD) பாதுகாப்பு அமைப்பு, ஒரிசா மாநிலத்தின் கடலோரப் பகுதியிலுள்ள தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்படும்.
எதிரி ஏவுகணையாக பிருதிவி ஏவுகணை சந்திப்பூர் தீவிலுள்ள ஏவுகணை மையத்திலிருந்து ஏவப்படும். அதனை விண்ணிலேயே இடைமறித்தழிக்கும் அதி நவீன ஏவுகணை, வீலர் தீவிலிருந்து செலுத்தப்படும். இவ்விருத் தீவுகளுக்கு இடையிலுள்ள தூரம் 70 கி.மீ. ஆகும்.
இரு ஏவுகணைகளையும் ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் செலுத்தி நடத்தப்படும் சோதனை என்பதால் இதற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனை நாளை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.