குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையுடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. விலைவாசி உயர்வு, உரம் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அவையில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வரும் மே 7ஆம் தேதி வரை சுமார் மூன்று மாத காலத்துக்கு இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இரண்டு கட்டமாக, இந்த கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 16ஆம் தேதி வரை முதல்கட்ட கூட்டத்தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று 2வது கட்ட கூட்டத்தொடர் துவங்கும் எனத் தெரிகிறது.
முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் உரையாற்றுகிறார். அப்போது, மத்திய அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். குடியரசுத் தலைவர் உரையுடன், இன்றைய கூட்டம் முடிவடையும்.
வரும் 24ஆம் தேதி ரயில்வே நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் மம்தா பானர்ஜியும், 26ஆம் தேதி மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்கின்றனர்.