அரிதாகத் தோன்றும் கங்கணம் போன்ற நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணத்தை இன்று உலகெங்கும் மக்களனைவரும் கண்டு களித்தனர். மாலத்தீவுகளில் இதனை மிகவும் தெளிவாகக் காணலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வர, முழுதும் மறைக்க முடியாமல், சூரியனின் நடுப்பகுதி மட்டும் மறைய, சூரியனின் விளிம்பு விட்டம் மட்டும் நெருப்பு வளையமாகக் காட்சியளித்த வானியல் அதிசயத்தைக் கண்டு இந்தியர்கள் அதிசயித்தனர்.
இது 11 நிமிடங்கள், 8 விநாடிகளுக்கு நீடித்தது. இது போன்ற சூரிய கிரகணம் அடுத்ததாக 2020ஆம் ஆண்டுதான் தோன்றும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
11 மணிக்கு இந்தியாவில் தோன்றிய இந்தக் கிரகணம் கன்னியாகுமரி, ராமேச்வரம், தனுஷ்கோடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நெருப்பு வளையமாக, வானில் ஒரு பெரிய கண் இருப்பது போன்று காட்சியளித்ததை பலரும் வியப்புடன் கண்டு களித்தனர்.
சரியாக மதியம் 3.11 மணிக்கு கிரகணம் மறைந்தது.
இதைக்காணவென்றே பிரத்யேகமாக இந்தியாவிற்கு வந்த ஜெர்மனி வானியல் ஆர்வலர் டேனியல் பிஷர் வார்கலாவில் உள்ள மலை உச்சியிலிருந்து கிரகணத்தைக் கண்டுகளித்தார். இவர் இதுவரை தன் வாழ்நாளில் பல்வேறு நாடுகள் சென்று 23 சூரிய கிரகணங்களைக் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரிய கங்கண சூரிய கிரகணத்தினால் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் 3 ராக்கெட்டுகளை வியாழனன்று அனுப்பியது. மேலும் 5 ராக்கெட்டுகளையும் அனுப்பவுள்ளது.
இந்தியா தவிர மத்திய ஆப்பிரிக்கா, மாலத்தீவுகள், வடக்கு இலங்கை, மியான்மாரின் சில பகுதிகள் மற்றும் சீனாவில் இந்த நெருப்பு வளையம் தெரிந்ததாக நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.