ஹெலிகாப்டரில் சென்ற போது மாயமான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் உட்பட 10 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக முதல்வர் ராஜசேகர ரெட்டி புறப்பட்டுச் சென்றார். காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் சித்தூர் சென்றிருக்க வேண்டும். ஆனால் கர்னூல் மாவட்டத்தில் காலை 9.30 மணியளவில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த சமயத்தில் அதனுடனான தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கர்நூல் மாவட்டத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரையிறங்கியதாகவும், முதல்வர் ராஜசேகர ரெட்டி பத்திரமாக உள்ளதாகவும் நண்பகல் வாக்கில் செய்திகள் வெளியானது. எனினும், அவர் பத்திரமாக மீட்கப்பட்ட தகவலை அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதிப்படுத்த தயங்கினர். இந்நிலையில், ஹெலிகாப்டர் தொடர்பிழந்து 8 மணி நேரம் (மாலை 5.30 மணி) ஆகியும் ராஜசேகர ரெட்டியின் இருப்பிடம் பற்றியும், அவரது நிலை குறித்தும் ஆந்திர அரசு உறுதியான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இதனால் ஆந்திரா முழுவதும் பதற்ற நிலை காணப்படுகிறது.கர்னூல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், ஹெலிகாப்டர் காட்டுப் பகுதியில் தரையிறங்கியிருக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. கர்னூல் மாவட்டம் நக்சலைட் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதி என்பதால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் குறித்த தகவல் அறிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என ஆந்திர அரசு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகளும் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு கவலை: முதல்வர் ராஜசேகர ரெட்டியின் இருப்பிடம் குறித்த உறுதியான தகவல் இல்லாததால் மத்திய அரசும் கவலை தெரிவித்துள்ளது. அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.இதற்கிடையில், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட ஆந்திர அரசியல் கட்சிகளும் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. தமிழக எல்லைப் பகுதிகளில் காணாமல் போன ஹெலிகாப்டர் குறித்து தேடுதல் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.