மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கைதாகியுள்ள அஜ்மல் கஸாப், மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும், தேவைப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் பயஙக்ரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிபதி தகிலியானி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கஸாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்த நெருக்கடி காரணமாகவும் தான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும், மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் இவ்வாறு கூறியதாகக் கருதினால் தன்னை தூக்கிலிடுங்கள் என்றும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு, கொல்லப்பட்ட 9 பயங்கரவாதிகளைக் குற்றம்சாட்டி வந்த அஜ்மல் கஸாப் தற்போது தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தாக்குதல்களில் 180 பேர் கொல்லப்பட்டனர்.
காமா மருத்துவமனைக்கு வெளியே தாமும், தன்னுடன் வந்து பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அபு இஸ்மாயிலும் வந்த போது எதிரே காவல்துறையினர் ஜீப் வந்ததாக கஸாப் கூறியுள்ளார்.
இஸ்மாயில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்த போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தன்னையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்து கீழே விழுந்து விட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தொடர்ந்து காவல்துறையினரின் ஜீப்பை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே சென்றதில், காவல்துறையினர் ஜீப்பிலேயே உயிரிழந்து விட்டதை தாங்கள் பார்த்ததாகவும் அஜ்மல் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தான் காயம் அடைந்திருப்பதால் தன்னால் தொடர்ந்து செல்ல முடியாது என்று கூறிய போதிலும், இஸ்மாயில் தன்னிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறி ஜீப்பை ஓட்டிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து கிர்காம் சவுபட்டியில் கஸாப் சென்ற போது, காவலர் துகாராமை கஸாப் துப்பாக்கியால் சுட்டார் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.