முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவமானப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
பிரபல விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம், சமீபத்தில் அமெரிக்கா செல்வதற்காக டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்திருந்தார். அப்போது, அமெரிக்க விமான நிறுவனமான கான்டினென்டல் விமானத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை பரிசோதனை செய்தனர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக, பயணிகள் ஆயுதங்கள் எதுவும் மறைத்து வைத்துள்ளார்களா என்பதை கண்டுபிடிப்பதற்கான முழு உடல்பரிசோதனையை மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பரிசோதனை, அப்துல் கலாமிடமும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் போன்ற உயர் பொறுப்பு வகிப்பவர்களுக்கு இந்த சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையையும் மீறி கலாமிடம் சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறுகையில், 'அப்துல் கலாம் பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.