அண்டை நாடான இந்தியா நல்லுறவை விரும்பினாலும், அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு உரியதாக அந்நாடு கூறுவதை ஏற்க முடியாது என்றும், அம்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியே என்று அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
அருணாசல பிரதேசத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும், மண் அரிப்பைத் தடுக்கும் ஒரு திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி அளிப்பதற்கு சீனா தடையேற்படுத்தியது குறித்து மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கிருஷ்ணா, அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கருதுவதால் அது அத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தது என்று கூறினார்.
2009-12 இந்தியாவுடனான கூட்டாண்மை செயல்திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கியின் செயற்குழுவில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, கனடா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஆதரித்தன என்றும், சீனா மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்றும் கூறிய கிருஷ்ணா, ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு பொருளாதார அடிப்படையில் மட்டுமே ஆட்சேபிக்க முடியும் என்கின்ற வங்கியின் நெறிகாட்டலை புறக்கணித்து சீனா செயல்பட்டது என்று கூறினார்.
“அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமே என்பதை அரசு ரீதியாகவே சீனாவிற்கு இந்தியா தெரிவித்துவிட்டது” என்று கூறிய கிருஷ்ணா, அந்நாட்டுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே இருதரப்பும் சிறப்புப் பணிக் குழுவை நியமித்துள்ளன என்றும் கூறினார்.
விரைவில் இரு தரப்பும் டெல்லியில் சந்தித்து எல்லைப் பிரச்சனை குறித்துப் பேசும் என்றும் கிருஷ்ணா கூறினார்.