அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் 20ம் தேதி இந்தியா வருகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதன் முறையாக வரும் 20ம் தேதி ஹிலாரி இந்தியா வருகிறார். அப்போது, இந்தியா- அமெரிக்கா இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்கா வரும்படி ஹிலாரி அழைப்பு விடுப்பார். இதை ஏற்று, பிரதமர் மன்மோகன் சிங் வரும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கா செல்வார் என்று தெரிகிறது. அப்போதும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருவார் என்றும் கூறப்படுகிறது.
இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஹிலாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த சுற்றுப் பயணத்தின்போது, இந்தியாவுடன் ஆழமான நட்பு உருவாக்கப்படும். இதற்கான புதிய அறிவிப்புகளை நான் வெளியிடுவேன். இந்தியா செல்ல நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என்றார்.