நாட்டின் 15வது நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த கரிய முண்டா நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகராக மீரா குமார் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு செய்தது.
அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவி வேட்பாளராக கரிய முண்டா தேர்வு செய்யப்பட்டார். அவரது வேட்புமனுவில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கையெழுத்திட்டுள்ளார். கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் வழிமொழிந்து இருக்கிறார். மற்றொரு வேட்புமனுவை, பாராளுமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்மொழிய, ஆனந்த் குமார் வழி மொழிந்து இருக்கிறார்.
காங்கிரஸ் சார்பிலும், கரிய முண்டாவுக்காக மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை பாராளுமன்ற கட்சித்தலைவர் பிரணாப் முகர்ஜி முன்மொழிய, மத்திய மந்திரி பவன் குமார் பன்சால் வழிமொழிந்து இருக்கிறார்.
கரிய முண்டாவைத் தவிர, வேறு யாரும் துணை சபாநாயகர் பதவிக்கு மனுவும் தாக்கல் செய்யாத காரணத்தால், நாளை நடக்கும் துணை சபாநாயகர் தேர்தலில் கரிய முண்டா போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.