நீர்மின் நிலையங்களை சீரமைக்கும் பணிக்காக கோரப்பட்ட ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாற்றில், அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த பினராய் விஜயன் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்க கேரள ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு கேரளாவின் பன்னியாறு, செங்குளம், பள்ளிவாசல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த நீர்மின் உற்பத்தி நிலையங்களை சீரமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் கனடாவின் என்.என்.சி. லவாலின் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கின.
இப்பணியை அளிப்பதில் ஊழல் நடந்ததாக கூறி சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், அப்போதைய மின்வாரிய அமைச்சரான பினராய் விஜயன் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு சி.பி.ஐ. சார்பில் கேரள ஆளுநர் ஆர்.எஸ்.காவையிடம் கோரப்பட்டது.
பினராய் விஜயன் மீது ஊழல் குற்றசாற்றை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அரசிடம் இல்லாததால் அவர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆளுநரிடம் கேரள அரசின் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டதாகவும், எனினும், சி.பி.ஐ. வசம் உரிய ஆதாரம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பினராய் விஜயன் மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநில செயலளராக பினராய் விஜயன் தற்போது செயல்பட்டு வருவதும், கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் அவருக்கு பனிப்போர் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.