கவுகாத்தி: உலகப் பொருளாதாரம் முன்பிருந்ததை விட சற்றே முன்னேறி வருவதல், இந்தியாவில் ஆண்டு வளர்ச்சி விகிதம் மீண்டும் 8 முதல் 9 விழுக்காட்டை அடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வரும் செப்டம்பர் மாதவாக்கில் உலகப் பொருளாதார நிலைமை பகுதியளவுக்கு சீராகும் என்று கூறினார்.
அப்படி உலக பொருளாதாரம் முன்னேறும்பட்சத்தில் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8ல் இருந்து 9 விழுக்காட்டை அடையும் என்றும், இதே அளவு வளர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக நீடித்ததாகவும் பிரதமர் கூறினார்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.1 விழுக்காட்டை எட்டியிருந்ததாகவும், நடப்பு நிதியாண்டில் ஆறரை முதல் 7 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் உறுதி கூறினார்.
பெரும்பாலான வளர்ந்த நாடுகள் நிதியமைப்பை தவறாகக் கையாண்டதாலேயே தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், அதன் தாக்கம் இந்தியாவிலும் ஓரளவு உள்ளது என்றார் பிரதமர்.