நடிகையும், சமாஜ்வாடிக் கட்சியின் ராம்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயப்பிரதாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், முலாயம் சிங் மீது அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் சமாஜ்வாடி கட்சி பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு ராம்பூர் தொகுதியில் ஜெயப்பிரதா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் அதே தொகுதியில் ஜெயப்பிரதாவிற்குப் பதில் அஸம் கானுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும் லக்னோவில் நேற்றிரவு அவசரமாக அழைக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது அமர்சிங் கூறுகையில், சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
சமாஜ்வாடிக் கட்சியில் பிளவு ஏற்படும் என்ற ரீதியில் அஸம்கான் தெரிவித்திருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில், தற்போது நிலைமை சுமூகமாக உள்ளது என்று அமர்சிங் குறிப்பிட்டார்.
அஸம்கானைப் பொருத்தவரை ஜெயப்பிரதாவிற்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று நீண்டகாலமாகவே கூறி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் பிரசாரம், வேட்புமனுத் தாக்கல் என்று பரபரப்பாக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சமாஜ்வாடிக் கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, கட்சித் தலைவர் முலாயம் சிங்கிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.