அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியிலும், சோனிட்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் நடந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளனர்.
குவஹாத்தியில் ஜலுக்பாரி காவல் நிலையத்திற்கு அருகில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று மதியம் 2.00 மணிக்கு வெடித்ததாகவும், இதில் அந்த இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குண்டு வெடிப்பிற்கு உல்ஃபா இயக்கத்தினர் காரணமாக இருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஜி.பி. சிங் கூறியதாகத் தொலைக்காட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. உல்ஃபா இயக்கம் துவங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தக் குண்டு வெடிப்பு நடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
குவஹாத்தியில் நாளை பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டம் நடக்கவுள்ள இடத்திற்கு அருகிலேயே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குவஹாத்தி குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் சோனிட்பூர் மாவட்டத்தில் தேக்கியாஜூலி என்ற இடத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதில் 6 பேர் காயமடைந்துள்ளதாகக் காவலர்துறையினர் தெரிவித்துள்ளனர்.