வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
பிலிபித் , திங்கள், 30 மார்ச் 2009 (10:37 IST)
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக போட்டியிடும் வருண் காந்தி சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அவர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி வருண் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் பிணை விடுதலை மனுவை வருண் காந்தி வாபஸ் பெற்றார். பிலிபித் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். இன்று வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரது பிணை மனு இன்று விசாரணைக்கு வருகிறது.சிறைக்கு அவர் கொண்டு செல்லப்படும்போது பா.ஜ. தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடத்தப்பட்ட தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் காயமடைந்தனர்.தடை உத்தரவை மீறியதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் மற்றும் கொலை முயற்சி வழக்கும் வருண் காந்தி மீது கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில் நேற்றிரவு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.