ஒரிசாவில் புருஷோத்தம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து இன்று அதிகாலை 4 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நுவாப்பள்ளி கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் சில நபர்கள் சட்டவிரோதமாக குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக கஞ்சாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிதின்ஜித் சிங் தெரிவித்தார்.
தயாரித்துக் கொண்டிருந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தவுடன், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த குண்டுகளும் அடுத்தடுத்து வெடித்ததால், பெரிய அளவில் அங்கு தீப்பிடித்ததாக நிதின்ஜித் சிங் கூறினார்.
குண்டுவெடிப்பில் அந்த வீடு மட்டுமல்லாமல் அருகிலிருந்த சில வீடுகளும் சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.