தேர்தல் நடத்தை விதிகளை மீறி முஸ்லிம்களை அவமதித்து பேசியுள்ள வருண் காந்தியின் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை மக்களவைத் தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று பா.ஜ.க.விற்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த சஞ்சய் காந்தி, மேனகா காந்தி ஆகியோரின் மகனான வருண் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், தனது 10 பக்க உத்தரவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிலிபிட் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வருண் காந்தி பேசிய பேச்சு மிகவும் கீழ்த்தரமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளது.
குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ள வருண் காந்தி, வருகிற பொதுத் தேர்தலில் நிற்பதற்குத் தகுந்தவர் அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வருண் காந்தி மீதான வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றங்களில் நிரூபணமாகும் வரை, அவர் தேர்தலில் நிற்பதைச் சட்டப்படி தடுக்க முடியாது என்று கூறியுள்ள ஆணையம், அவர் சார்ந்துள்ள பா.ஜ.க.தான் அவரைத் தேர்தலில் நிறுத்தாமல் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.