வருகிற மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று பா.ஜ.க.வைப் போல காங்கிரஸ் கட்சியும் கனவு காண்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைதராபாத்தில் நடக்கும் மூன்று நாள் இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பரதன், "இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரம் மூலம் 2004இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கனவு கண்ட பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்தது. அதேபோல இப்போது காங்கிரஸ் கட்சி கனவு காண்கிறது" என்றார்.
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களை விட்டால் வேறு மாற்று இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றன ஆனால், இடதுசாரிக் கட்சிகளும் அவற்றுடன் ஒத்த கட்சிகளும் உண்மையான மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்றாவது அணியை மூன்றாம் தர அணி (third rated front) என்று விமர்சித்த பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுவிற்குக் கண்டனம் தெரிவித்த பரதன், "நாவை அடக்கிப் பேசுங்கள். இல்லையென்றால் தகுந்த பாடம் கற்பிப்போம்" என்று எச்சரித்தார்.