காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமராகப் பதவியேற்கும் திட்டம் எதுவும் இல்லை என அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று காலை குஜராத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அம்பாஜி கோயிலுக்குச் சென்றார். பின்னர் காந்திநகரில் இளைஞர் காங்கிரஸால் மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், யார் பிரதமர் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், டன்டா தாலுக்காவின் சனாலி கிராமத்திற்கு ராகுல் காந்தி சென்ற போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வரும் 2014இல் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எதிர்காலத்தை பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை என ராகுல் காந்தி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.