பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் பாகிஸ்தான் அரசும், தாலிபான் இயக்கமும் போர் நிறுத்தம் செய்து கொண்டுள்ளது இந்தியாவிற்கு கவலையளிக்கக் கூடியது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.
இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட சிறப்பான அணிகளை கெளரவிக்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்த விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சரிடம், பாகிஸ்தான்-தாலிபான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, மும்பையில் கடந்த நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலிற்குப் பிறகு மாறிவிட்ட பாதுகாப்புச் சூழ்நிலையில், இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் இந்தியாவிற்கு மேலும் கவலையளிக்கக் கூடியது என்று பதிலளித்தார்.
பாகிஸ்தான்-தாலிபான் போர் நிறுத்தம் குறித்து அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்ன கருத்து கூறினாரோ அதுவே இந்தியாவின் நிலைப்பாடு என்று அந்தோனி கூறினார்.
“தாலிபான் ஒரு பயங்கரவாத இயக்கம். வன்முறையிலும், அழிவிலும் மட்டுமே நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கம் அது. அது மானுடத்திற்கும், நாகரீகத்திற்கும் எதிரான ஒரு இயக்கம் என்பதே எனது மதிப்பீடு” என்று பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.