நமது நாட்டின் முன்னணி உரத் தொழிற்சாலைகள் எல்லாம் இனி வர்த்தரீதியிலான யுரேனியம் தயாரிப்புக் கூடங்களாக மாறப்போகின்றன. இதனால் நமது அணு உலைகளில் எரிபொருள் பற்றாக்குறை நீங்கி, மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஸ்போரிக் அமிலத்தில் இருந்து யுரேனியம் பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்திய அரசின் கன நீர் வாரியம் (Heavy Water Board (HWB)) உருவாக்கியுள்ளது. உரத்தில் ஒரு வகைதான் பாஸ்போரிக் அமிலம் என்பதால், நமது உரத் தொழிற்சாலைகளில் இருந்தே யுரேனியம் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தொழில்நுட்பம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கன நீர் வாரியத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ஏ.எல்.என். ராவ், முதல்கட்டமாக மும்பையில் உள்ள ராஷ்ட்ரிய கெமிக்கல் மற்றும் உரத் தொழிற்சாலையில் இந்த ஆண்டின் மத்தியில் சோதனை முயற்சியாக சில டன்கள் யுரேனியம் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கம் ஹால்டியாவில் உள்ள டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், விசாகப்பட்டினத்தில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை, ஒரிசா பாரதீப்பில் உள்ள IFFCO ஆகிய 3 நிறுவனங்களிலும், பாஸ்போரிக் அமிலத்தில் இருந்து யுரேனியம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை நிறுவ வாரியம் திட்டமிட்டுள்ளது என்றும் ராவ் தெரிவித்தார்.
யுரேனியம் பற்றாக்குறை காரணமாக மொத்தம் 4,100 மெகா வாட் உற்பத்தித் திறன் உள்ள நமது முக்கியமான அணு மின் உலைகளில் 1,800 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
ரஷ்யா, ஃபிரான்ஸ், கஸகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் அண்மையில் மேற்கொண்டுள்ள அணு ஒப்பந்தங்களின் பலனாக, புதிதாக அமைக்கப்பட்ட அணு உலைகள் உட்பட, நமது அணு உலைகளின் உற்பத்தித் திறன் இன்னும் 12 மாதங்களில் 6,000 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் மின்சாரத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறினார்.
ஃபிரான்சில் இருந்து முதல் கட்டமாக 60 டன்கள் யுரேனியம் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அணு சக்தித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.