பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.2, சமையல் எரிவாயு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என்று அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 25 ரூபாய் குறைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்வது இல்லை என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.2ம் குறைக்கப்பட்டது. அப்போது சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.