கியான் கவுர் என்ற பெண் தனது 82ஆவது வயதில் தனது உறுப்புகளை தானம் செய்துள்ளார். தனது உறுப்புகளை தானம் செய்த வயது முதிர்ந்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இம்மாதம் 27ஆம் தேதி அவர் இறந்த பின்னர் அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவை தானம் செய்யப்பட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த தர்லோக் சிங்கின் மனைவியான கவுரின் கல்லீரல் ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரியின் குடும்ப உறுப்பினருக்கும், கண்கள் தேவையான இரு நோயாளிகளுக்கும் அளிக்கப்பட்டன.
ராணுவ மருத்துவமனையில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உறுப்புகள் தானம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் பல உறுப்புகள் ஒரேநேரத்தில் தானம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.
இதுவரை 18 முறை உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தில் பணிபுரிந்தவர்களில் 3,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.