சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ, தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் பிணைய விடுதலை மனுக்களை ஹைதராபாத் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
ராமலிங்க ராஜூவிடம் விசாரணை நடத்தக் கோரி பங்குப் பரிவர்த்தனை கழகம் (செபி) தாக்கல் செய்துள்ள மனு மற்றும் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினர் (சிஐடி) ராஜூவை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகின்றன.
சத்யம் அலுவலகத்தில் சிஐடி-யினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்-டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றில் இருந்து முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இப்பிரச்சினையில் கணக்காளர்களின் உதவியை ஆந்திர மாநில காவல்துறையினர் கோரியிருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி மற்றும் 3 முன்னாள் இயக்குனர்களிடம் ஓரிரு நாளில் காவல்துறையினர் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.