காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அப்பகுதியில் சண்டையை நிறுத்தி அமைதியை மீண்டும் நிலைநாட்ட சர்வதேசச் சமூகம் ஒன்றுபட்டுச் செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் இன்று அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டைத் துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காஸாவில் நாள்தோறும் பலியாகி வரும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்துக் கவலை தெரிவித்தார், மேலும் இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பாலஸ்தீனர்கள் என்ற காரணத்திற்காக மட்டும் தாக்குதலை நாங்கள் கண்டிக்கவில்லை. அப்பகுதியில் ஏராளமான இந்தியர்களும் பணியாற்றி வருகின்றனர் என்றார் அவர்.
கடந்த டிசம்பர் 27 அன்று இஸ்ரேல் தாக்குதலைத் துவங்கியது முதல் காஸாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 660 அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.