ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் 11ஆவது முதல்வராகப் பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவிற்கு ஜம்முவில் ஜெனரல் ஜொரோவார் சிங் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் என்.என்.வோரா பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்திருந்து பங்கேற்றனர்.
தற்போது 38 வயதாகும் உமர் அப்துல்லாதான் மாநிலத்தின் முதல் இளைய முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.