பெங்களூருவில் உள்ள ராணுவ தலைமை அலுவலக வளாகத்திற்குள் சுவர் ஏறி குதித்த ஒரு மாணவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் ராணுவ தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் மாணவர் ஒருவரை காவல்துறையினர் துரத்தினர்.
காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மாணவர் ராணுவ தலைமை அலுவலகத்தின் சுவர் மீது ஏறி உள்ளே குதித்தார்.
ராணுவ அலுவலகத்துக்குள் திடீரென்று இரவில் யாரோ ஒருவர் குதித்ததைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் அந்த மாணவரை சுட்டுக் கொன்றனர்.
மும்பையில் அண்மையில் நட்சத்திர விடுதிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தால், உஷார் நிலையில் இருந்துள்ள பாதுகாப்புப் படையினர், அலுவலக வளாகத்திற்குள் புகுந்தது தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று கருதி சுட்டுக் கொன்றனர்.
என்றாலும் கொல்லப்பட்ட மாணவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.