இந்தியா போரை விரும்பவில்லை என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், 'பயங்கரவாத இயந்திரத்தை' பாகிஸ்தான் கண்டிப்பாக முறியடிக்க வேண்டும் என்றும், சர்வதேசச் சமூகமும் அதை வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தலைநகர் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவரிடம், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் உடனான தற்போதைய நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இது போர் தொடர்பான பிரச்சனை அல்ல. போரை யாரும் விரும்பவில்லை" என்றார்.
பயங்கரவாத இயந்திரத்தை முறியடிக்க வெளிப்படையான உறுதியான முயற்சிகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்ற பிரதமர். தாங்கள் செய்துள்ளது என்ன என்பது பாகிஸ்தானிற்குத் தெரியும் என்றார்.
தங்களின் மண்ணில் இருந்து பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் அனுமதிப்பதை ஐ.நா.வின் பல தீர்மானங்கள் தடை செய்கின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தீர்மானங்களை பாகிஸ்தான் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் சர்வதேசச் சமூகமும் தனது அழுத்தத்தை பாகிஸ்தானின் மீது செலுத்தி, பயங்கரவாதத்தை முறியடிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.