மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பேருந்தில் ஒரிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2 ஆயிரம் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதால், அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஒரிசா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இரு மாநில எல்லையான பாலசூர் மாவட்டம் லட்சுமண்நாத் சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை அதிகாரிகள் பரிசோதனை நடத்தியதில், சுமார் 2 ஆயிரம் கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயுடன் கொண்டுவரப்பட்டதை அறிந்தனர். இதையடுத்து அவற்றை அழிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த கோழிகள் அனுப்பப்பட்ட பண்ணையிலும் அதிகாரிகள் சோதனையிட்டு, அங்கிருந்த கோழிகளை அழித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோழிகளை அனுப்புவதற்கு முன்பாக அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை பரிசோதிக்க மேற்குவங்க அதிகாரிகள் தவறி விட்டதாகவும் ஒரிசா மாநில அதிகாரிகள் குறைகூறினர்.
அம்மாநிலத்தில் இருந்து ஒரிசாவிற்கு கோழிகள் அனுப்பி வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
அண்டை மாநிலங்களில் இருந்து ஒரிசா கோழிப்பண்ணைகளுக்கு கோழிகள் இறக்குமதி செய்வதற்கு ஒரிசா அரசு செவ்வாயன்று தடை விதித்தது.
ஒரிசாவின் பல்வேறு இடங்களிலும் உள்ள பண்ணைகளில் இருந்து கோழிகளின் இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், இதுவரை பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.