போபால்/ராய்ப்பூர்: ராஜஸ்தானை இழந்தாலும் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களைப் பா.ஜ.க. தக்கவைத்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 143 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க., சத்தீஷ்கரில் 46 இடங்களில் வெற்றிபெற்று உள்ளதுடன் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 228 தொகுதிகளிலும், காங்கிரஸ் 228 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இம்மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜ.க. தொடக்கம் முதலே மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தது.
இதில் பா.ஜ.க. 143 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது.
தவிர, பகுஜன் சமாஜ் கட்சி 7 இடங்களிலும், பாரதீய ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
உமாபாரதி அதிர்ச்சித் தோல்வி!
முன்னாள் முதல்வரும் பாரதீய ஜனசக்திக் கட்சியின் தலைவருமான உமாபாரதி தான் போட்டியிட்ட டிகாம்கார்க் தொகுதியில் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். இவரது கட்சியும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகளைப் பிரிக்கவில்லை.
சத்தீஷ்கர் மாநிலத்திலும் பா.ஜ.க. முன்னிலை!
மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட சத்தீஷ்கர் மாநிலத்திலும் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.
இந்த மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. அனைத்து இடங்களிலும், காங்கிரஸ் 87 இடங்களிலும் போட்டியிட்டன. இங்கும் தொடக்கம் முதல் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. செல்வாக்குடன் விளங்கியது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 40 இடங்களில் வெற்றிபெற்று உள்ளதுடன் 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. குறைந்தது 40க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பா.ஜ.க. நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் 31 இடங்களில் வெற்றிபெற்று உள்ளதுடன் 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
80 தொகுதிகளின் நிலவரங்கள் மட்டுமே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் காரணமாக 10 தொகுதிகளில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தடைப்பட்டுள்ளதால், அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதன்பிறகுதான் அந்தந்தத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்.