ராஜஸ்தான் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்தியுள்ளது காங்கிரஸ். பா.ஜ.க. 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. 193 இடங்களிலும், காங்கிரஸ் 200 இடங்களிலும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
இதில் காங்கிரஸ் 96 இடங்களில் வெற்றிபெற்று ஆளும் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்தியுள்ளது. பா.ஜ.க. 78 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மற்றவர்கள் 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்: பா.ஜ.க.!
தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜே இன்று தனது பதவிவிலகல் கடிதத்தை மாநில ஆளுநரிடம் கொடுத்தார். அப்போது, மக்களின் தீர்ப்பை மதித்து இனி பொறுப்பான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இதற்கிடையில் வசுந்தரா ராஜே தான் போட்டியிட்ட ஜால்ராபதான் தொகுதியில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட காஙகிரஸ் கட்சியின் மோகன் சிங் ரத்தோரை விட 32,324 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் தான் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட பா.ஜ.க. வின் ராஜேந்திர கெலாட்டைவிட 14,440 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அவரிடம் அடுத்த முதல்வர் யார் என்று கேட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. 120 தொகுதிகளிலும், காங்கிரஸ் 56 தொகுதிகளிலும், மற்றவர்கள் 24 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.