ஐந்து மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தானை இழந்துள்ளதன் மூலம் ஒன்றும் பா.ஜ.க.விற்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடவில்லை என்றார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,"எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்த டெல்லியில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரத்தைப் பார்க்கும்போது பா.ஜ.க.விற்கு பின்னடைவு எதுவும் இல்லை. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கரில் வெற்றிபெற்றுள்ளோம். ராஜஸ்தானில் துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது" என்றார்.
சட்டப் பேரவைத் தேர்தல்களில் உள்ளூர் பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. வாக்காளர்கள் அதனடிப்படையில் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்துள்ளனர் என்ற அவர், ராஜஸ்தான் முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.