ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள மூன்று முன்னாள் முதல்வர்கள் குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), முஃப்தி முகமது சயீத் (பிடிபி), ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி) ஆகியோரின் வெற்றியைப் பொருத்தே அங்கு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹஸரத் பால், சோனாவர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார் ஃபரூக் அப்துல்லா. முஃப்தி முகமது சயீத்தைப் பொருத்தவரை அனந்தநாக் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பதேர்வா தொகுதியில் போட்டியிட்டு வென்ற குலாம்நபி ஆசாத், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், மூன்று முன்னாள் முதல்வர்களின் வெற்றியைப் பொருத்தே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 2002ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 87 தொகுதிகளிலும் 706 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை மொத்தம் 1,200 பேர் போட்டியிட்டுள்ளனர். 1996ஆம் ஆண்டைப் பொருத்தவரை 531 பேர் மட்டுமே போட்டியிட்டனர்.
தற்போது ஏறக்குறைய அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த முறை தேர்தலில் போட்டியிடாத ஃபரூக் அப்துல்லா, இந்த முறை 2 தொகுதிகளிலும் பிடிபிக்கு கடும் சவாலாக விளங்குகிறார். ஏற்கனவே 3 முறை சட்டசபைக்குத் தேர்வு பெற்றுள்ள அவர், தற்போது முதல்முறையாக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.