சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.2 விலை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான் என்றும் தெரிவித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, சர்வதேசச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலைகளை மேலும் குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
முன்னதாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50 என்றவாறு விலைகளை மத்திய அரசு உயர்த்தியது.
சர்தேசச் சந்தையில் ஜூலை மாதம் பேரல் ஒன்று 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது பேரல் ஒன்று 43.5 டாலராகக் குறைந்துள்ளது.