சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இன்று கையெழுத்திட்டன.
இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளில் இது ஒரு புதிய மைல்கல் என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து ரஷ்ய அதிபர் டிமிட்ரி மேட்விடேவுடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ள சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், அணு சக்தித் துறையில் ரஷ்யாவுடனான நமது ஒத்துழைப்பில் புதிய மைல்கல்."என்றார்.
கூடங்குளத்தில் 4 புதிய அணு உலை!
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் புதிதாக 4 அணு உலைகளை ரஷ்யா அமைத்துத் தரவுள்ளது.
அணு சக்தி தவிர சுற்றுலா, விண்வெளி ஆகியவை தொடர்பான பத்து ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளன.