பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க கூட்டுப் புலனாய்வு அமைப்பு (federal investigation agency) ஒன்றை அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல், "பாதுகாப்பு என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த விடயம். அது தொடர்பாக உள்துறை அமைச்சர் (ப.சிதம்பரம்) ஆய்வு செய்து வருகிறார் என்றார்."
"கூட்டுப் புலனாய்வு அமைப்பு நிச்சயம் அமைக்கப்படும். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எதிர்கால பாதுகாப்பிற்குத் தேவையான எல்லா உறுதிமொழிகளையும் மக்களுக்குத் தர நாங்கள் விரும்புகிறோம்." என்றார் அவர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தபடி கூட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு கபில் சிபல் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
மேலும், "கொள்கை அடிப்படையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் அளித்துள்ள ஒவ்வொரு உறுதிமொழியும் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும். இதில் காலம் முக்கியப்பங்கு வகிக்கிறது" என்றார் அவர்.
கூட்டுப் புலனாய்வு அமைப்பு அமைப்பதைத் தவிர, வான்வழி, கடல்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நாடு முழுவதும் 4 தேசியப் பாதுகாப்புப் படை முகாம்களை அமைத்தல், பயங்கரவாதத்தை முறியடிக்கச் சட்ட ரீதியான நடவடிக்கை ஆகிய உறுதிமொழிகளையும் பிரதமர் அளித்துள்ளார்.