ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடந்த இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ்- 200, பா.ஜ.க.- 193, பகுஜன் சமாஜ் கட்சி- 199, சுயேட்சைகள்- 1,019 ஆகியவை உள்ளிட்ட 2,194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மொத்தமுள்ள 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்களும் (இதில் 1.72 லட்சம் பேர் பெண்கள்) தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய ஏதுவாக 42,212 வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டிருந்தன. இதில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோட்டா மாவட்டத்தில் லாட்பூரா தொகுதியில் படிகேரா என்ற கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையை அடக்குவதற்காக மத்திய ரிசர்வ் காவல்படைக் காவலர் ஒருவர் வானை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று காவல்துறை இயக்குநர் கே.எஸ். பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், பிரச்சனையின் தீவிரம் குறித்த அறிக்கையின் அடிப்படையில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வசுந்தரா ராஜே, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் அசோக் கெலாட், மாநிலக் காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்கள் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.