நேபாளத்தில் இருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த இரண்டு காஷ்மீர் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
புல்வாமா பேருந்து நிலையம் அருகில் பாதுகாப்புப் படையினர் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், ஒருவர் வடக்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் முகமது பட், மற்றொருவர் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த செளகத் அகமது வானி என்று தெரியவந்துள்ளது.
மேலும், தாங்கள் இருவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சென்று, ஆயுதப் பயிற்சி பெற்று உள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் இருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் 12 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கடந்த மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.