காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுறுத்தியதற்கு இணங்க, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று தனது பதவிவிலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார்.
மும்பையில் நவம்பர் 26 அன்று கடல்வழியாக படகில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அயல்நாட்டவர்கள் உட்பட 190 பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பாதுகாப்புக் குறைபாடு காரணமாக நடந்த இந்தத் தாக்குதலிற்குப் பொறுப்பேற்று மராட்டிய உள்துறை அமைச்சரும் துணை முதல்வருமான ஆர்.ஆர். பாட்டீல் பதவிவிலகியுள்ள நிலையில், முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவிவிலக விரும்புவதாக கட்சித் தலைமைக்குத் தெரிவித்திருந்தார்.
இதைப் பரிசீலித்த காங்கிரஸ் தலைமை, முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவிவிலக வேண்டும் என்று முடிவு செய்து நேற்றிரவு அறிவித்தது.
இதையடுத்து அவர் இன்று தனது பதவிவிலகல் கடிதத்தை ஆளுநர் எஸ்.ஜமீரிடம் கொடுத்தார். அப்போது இரண்டு முறை முதல்வர் பதவிவகித்தது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டார்.