ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் அமைதியாகத் துவங்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்களும் (இதில் 1.72 லட்சம் பேர் பெண்கள்) தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய ஏதுவாக 42,212 வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளன.
இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக களத்தில் உள்ளன. இதில் பா.ஜ.க. 199 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் 2,194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்று பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி வரும் 8ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தானை ஒட்டியுள்ள ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம். குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.