மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் பதவி விலகல் கடித்தை ஏற்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்வர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
புதுடெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், மராட்டிய மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ஏ.கே. ஆண்டனி, தேஷ்முக்கின் பதவி விலக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை மும்பையில் நடைபெறுகிறது என்றும் கூறினார்.
இந்த கூட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) கண்காணிப்பு குழுவினர் உடன் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் கடந்த 26ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து மராட்டிய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.