நமது நாட்டின் கடலோரப் பாதுகாப்பு ஏற்கெனவே மும்பையில் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்டுள்ள நிலையில், வான்வழித் தாக்குதல்களுக்கு வாய்ப்பு இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி எச்சரித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி, அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் மீது அல் காய்டா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல நமது நாட்டிலும் வான்வழித் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும், அதைத் தடுக்கத் தயாராகும்படியும் எச்சரித்தார்.
முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் இடையே மிகுந்த ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், பாதுகாப்பு அமைப்புக்களும் புலனாய்வு அமைப்புக்களும் தகவல் பறிமாற்றத்தை வேகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, விமானப்படைத் தளபதி மார்ஷல் ஃபாலி ஹோமி மேஜர், தரைப்படைத் தளபதி ஜெனரல் தீபக் கபூர், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.