ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே கையெறி குண்டை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் வரும் 17ஆம் தேதி 6-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உரி மற்றும் தோடா மாவட்டத்தில் பிரசாரம் செய்ய ஒரு நாள் பயணமாக சோனியா அங்கு வந்தார்.
தோடாவில் உளள பரடே மைதானத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி அங்கு உரையாற்றினார். பின்னர் அவர் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு கையெறி குண்டை பாதுகாப்பு படையினர் கண்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்த குண்டை செயலிழக்கச் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.